ரூ.300 வாடகை கொடுக்க முடியாத கஷ்டம், தண்ணீர் குடித்து பசியாற்றிய காலம் : ‛மண்டாடி' விழாவில் சூரியின் பிளாஷ்பேக்
விடுதலை, விடுதலை 2, கருடன், கொட்டுக்காளி, மாமன் படங்களுக்குபின் சூரி கதைநாயகனாக நடிக்கும் படம் மண்டாடி. ராமநாதபுர மாவட்டம் கடல் பின்னணியில், பாய்மர படகு போட்டி பின்னணியில் இந்த கதை நடக்கிறது. மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். செப்டம்பர் 10ல் படம் ரிலீஸ். இந்த படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று நடந்தது.
அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆர்.ஜே.பாலாஜி பேசுகையில் '' நான் இங்கு வந்ததற்கு ஒரே காரணம் என் நண்பன் சூரி தான். தனிப்பட்ட முறையில் எங்களுக்கு இடையே நல்ல நட்பு உண்டு. நான் படப் பிரச்னைகளை சந்திக்கும்போது போன் செய்து ஆறுதல் கூறுவார். 1999-ம் ஆண்டு வெளியான சங்கமம் படத்தில் விஜயகுமார் காரால் அடிபட்டுப் பறக்கும் சீனில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாகத் தொடங்கிய இவரது பயணம், இன்று ஒரு ஹீரோவாக உயர்ந்துள்ளது. இதற்கு 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. சினிமா பின்னணி இல்லாமல் வருபவர்களுக்கு சூரி ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். விடாமுயற்சியுடன் உழைத்தால் யார் வேண்டுமானாலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதற்கு அவர்தான் உதாரணம். இன்று அவருக்குப் பெரிய அளவில் போஸ்டர்களும் வரவேற்பும் கிடைப்பதைக் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார்.
அவர் இளையராஜா மாதிரி
விழாவில் சூரி பேசுகையில் '' சில வார்த்தைகளை எத்தனை முறை சொன்னாலும் சலிக்காது. இன்றைக்கு எனக்கு கிடைக்கக்கூடிய இந்த விசிலும், கைத்தட்டலும் அனைத்தும் வெற்றிமாறனுக்கு தான் சேரும். நான் இதுவரை வந்ததற்கும், இதற்கு மேல் போகப்போகிறதற்கும் காரணம் அவர்தான். எவ்வளவு புயல் காற்று வந்தாலும் நீங்கள் போட்ட விதை முளைத்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு மேல் பலத்த காற்று கூட அடிக்கலாம். எது வந்தாலும் அந்தச் செடி ஒடியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இளையராஜா பெரிய ஹீரோக்களுக்கும் இசையமைப்பார், சிறிய ஹீரோக்களுக்கும் இசையமைத்து கொடுப்பார். அவரால் பல இயக்குனர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதேபோல் ஜி.வி.பிரகாஷ் குமாரும் அனைவருக்கும் பாடல்கள் கொடுத்து வருகிறார்.
இந்தப் படத்தில் ரிஸ்க் இல்லை, ரிஸ்க்கையே படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினேன். இந்தப் படத்தை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் ராமநாதபுரம் சுற்றுவட்டார ஊர் மக்கள் எங்களுக்கு அவ்வளவு ஆதரவு கொடுத்தார்கள். அவர்கள் ஒருநாள் வராமல் இருந்திருந்தால் கூட இந்தப் படம் கண்டிப்பாக வந்திருக்காது. என் குடும்பம் இப்போதும் என்னுடன் வந்திருக்கிறது. நான் இந்த இடத்தில் நிற்பதற்கு என் குடும்பம்தான் காரணம். என் அம்மா இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர் காரில் வரும்போது கூட, ஒருகாலத்தில் 300 ரூபாய் வாடகை கொடுக்கக்கூட காசு இல்லாமல் அழுதிருக்கிறான். ஆனால் இன்றைக்கு அவனுகாக்க இத்தனை பேர் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள் என்று சொல்லிக் கொண்டே வந்தார். எங்க அம்மா என்னுடைய சாமி. அவருக்கு நான் நன்றி சொல்ல முடியாது என்றார். அதை தொடர்ந்து சூரி தனது தாயாரை மேடைக்கு அழைத்து வந்து பேச வைத்தார்.
தண்ணீர் குடித்து பசியாற்றிய சூரி
அப்போது பேசிய அவரது தாயார், என் மகன் கஷ்டப்பட்டு இந்த மேடையில் வந்து நிற்பான் என்று கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. இந்த நேரத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். மேலும் எங்கள் ஊரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் பலருக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் என் மகன் எனக்கு போன் செய்தான். சாப்பிட்டியா பா? என்று கேட்டேன். அதற்கு அவன், வயிறு நிறைய தண்ணீர் குடித்துவிட்டு படுத்துவிட்டேன் அம்மா என்று கூறினான். அதை என்னால் தாங்கவே முடியவில்லை, அப்படிப்பட்ட நிலையில் இருந்தவன் இந்த நிலைக்கு வந்துள்ளான். மகிழ்ச்சி'' என பழைய நினைவுகளை அழுதுகொண்டே பகிர்ந்துகொண்டார்.''
பெயரை இப்படி புரிந்துகொண்டார்கள்
தொடர்ந்து பேசிய சூரி 'மண்டாடி' படத்தின் பெயரை யாரிடமாவது சொல்லும்போது, அவர்கள் அதை மன்றாடி, மண்ணடி, மந்தைவெளி என மாற்றிப் புரிந்து கொண்டதாகவும், படத்தின் பெயரைச் சொல்லி அவர்களுக்குப் புரிய வைப்பதே தனக்குப் பெரும் வேலையாக இருந்ததாகவும் கலகலப்பாகக் கூறினார். விடுதலை', 'கருடன்', 'கொட்டுக்காளி' படங்களுக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் அளித்த பேராதரவுக்கு நன்றி. அதனால் தான் இப்படிப்பட்ட கதைகளில் நடிக்க முடிகிறது என்றார்