உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தாமதமாகும் பென்ஸ் : தாடி எடுக்க முடியாத விரக்தியில் நிவின்பாலி

தாமதமாகும் பென்ஸ் : தாடி எடுக்க முடியாத விரக்தியில் நிவின்பாலி

நடிகர் நிவின்பாலி மலையாளத்தில் கடந்த வருடம் வரை இறங்கு முகத்தில் இருந்தாலும், கடந்த வருட இறுதியில் வெளியான 'சர்வம் மாயா' மற்றும் சமீபத்தில் வெளியான 'பெத்லகேம் குடும்ப யூனிட்' ஆகிய படங்களில் அடுத்தடுத்து 100 கோடி வசூல் வெற்றியைப் பெற்று மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பி உள்ளார். அதேசமயம், அவர் தமிழில் நடித்துள்ள 'ஏழு கடல் ஏழுமலை' திரைப்படம் தயாராகியும் கூட வெளியாகாமல் இன்னும் கிடப்பில் இருக்கிறது. அதேபோல, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து 'பென்ஸ்' என்கிற படத்தில் வில்லனாக நடித்து வந்தார் நிவின் பாலி.

இப்படத்தில் இவரது காட்சிகள் இன்னும் 30 சதவீதத்திற்கு மேல் படமாக்கப்பட வேண்டி இருக்கிறதாம். ஆனால், மீண்டும் படப்பிடிப்பு எப்போது நடக்கும் என தெரியாமல் பல மாதங்களாக இருப்பதாகவும், இந்த பேட்டியை பார்த்துவிட்டு இது குறித்து தனக்கு யாராவது தகவல் தெரிவித்தால் நன்றாக இருக்கும் என்றும் நகைச்சுவை கலந்த விரக்தியுடன் கூறியுள்ளார் நிவின்பாலி.

மேலும், இப்படத்திற்காக தாடி வளர்ப்பதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் 'பென்ஸ்' படத்திற்கு கூப்பிடுவார்கள் என்பதால் தான் மலையாளத்தில் நடிக்கும் அனைத்து படங்களிலும் தாடியுடன் தான் நடிக்க வேண்டி இருக்கிறது என்கிற தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் நிவின்பாலி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !