செப்., 1 முதல் புது படங்கள் ரிலீஸ் நிறுத்தம் : தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு
செப்., 1 முதல் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் நடந்தது. இதில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை...
செப்டம்பர் 1ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை 8-வாரம் கழித்து தான் ஓடிடி-யில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால் தான், அந்தந்த படங்களை திரையிடுவோம் என தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தயாரிப்பாளர்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளனர்.
தென்னிந்திய மாநிலங்களில் இப்படியொரு முறை நடைமுறையில் இல்லாதபோது தமிழகத்தில் மட்டும் புகுத்துவது கண்டிக்கத்தக்கது. ஆண்டுக்கு 250 படங்கள் வெளியாகின்றன. இதில் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நஷ்டத்தையே சந்திக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இந்த முடிவை தயாரிப்பாளர்களான எங்களால் ஏற்க முடியது. இதை கண்டித்து செப்., 1 முதல் புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துவது என்றும் முடிவெடுத்துள்ளோம். இதுபற்றி அடுத்தப்படியாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த பிரச்னைக்கு தீர்வு காண உள்ளோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் தற்போது புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியான 4 வாரங்களுக்கு பின்னர் தான் ஓடிடியில் வெளியாகும் என்ற நடைமுறை உள்ளது.