மகளுக்கு எந்த சலுகையும் காட்ட கூடாது : இயக்குனருக்கு மோகன்லால் நிபந்தனை
நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் தற்போது மலையாளத் திரையுலகில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து மோகன்லாலின் மகளான விஸ்மயாவும் தற்போது 'தொடக்கம்' என்கிற படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் 200 கோடிக்கு மேல் வசூலையும் பெற்ற '2018' என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் தான் இந்த படத்தை இயக்குகிறார். வரும் ஓணம் பண்டிகைக்கு படம் வெளியாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து படம் குறித்த சில விஷயங்களை மீடியாக்களில் பேசி வருகிறார் ஜூட் ஆண்டனி ஜோசப். அப்போது இந்த படத்தின் துவக்கத்திலேயே மோகன்லால் தன்னிடம் ஒரு ஆச்சரியமான வேண்டுகோள் வைத்ததாக கூறியுள்ளார் ஜூட் ஆண்டனி ஜோசப்.
இது குறித்து அவர் கூறும்போது, மோகன்லால் தனது மகளைப் பற்றி எந்த விஷயத்தையும் பெரிதாகச் சொல்லி சிறப்பு கவனம் செலுத்தச் சொல்லவில்லை. அதற்கு பதிலாக, 'மகளுக்கு எந்தவித சலுகைகளும் வழங்க வேண்டாம்; படப்பிடிப்பு தளத்தில் அவரையும் மற்ற நடிகர்களைப் போலவே சாதாரண ஒருவராக நடத்த வேண்டும்; அவருக்கு உரிய கடினமான பயிற்சி மற்றும் சோதனைகளை தாண்டிதான் அவர் வரவேண்டும்' என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். ஒரு பிரபல ஹீரோவாக இருந்தாலும் தனது மகள் தனது சொந்த முயற்சியில் மட்டுமே வளர வேண்டும் என்று அவர் விரும்பியது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார் ஜூட் ஆண்டனி ஜோசப்.