உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தந்தையை விட அதிகம் ஊக்கப்படுத்துவது அண்ணன் தான் ; விஸ்மயா மோகன்லால்

தந்தையை விட அதிகம் ஊக்கப்படுத்துவது அண்ணன் தான் ; விஸ்மயா மோகன்லால்


நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ், இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பயிற்சி எடுத்தாலும், பின்னர் குருவின் டைரக்சனிலேயே 'ஆதி' என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாகி, தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேபோல மோகன்லாலின் மகள் விஸ்மயா, ஆரம்பத்தில் சினிமா மீது நாட்டம் இல்லாமல் படிப்பு, இயற்கை, பயணம் என்று இருந்தவர், தற்போது 'தொடக்கம்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். '2018' என்கிற மிகப்பெரிய வெற்றிப் படத்தை இயக்கிய இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மோகன்லால் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் ஓணம் பண்டிகைக்கு இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த நிலையில் தன்னுடைய அண்ணன் பிரணவ் பற்றி ஒரு பேட்டியில் விஸ்மயா கூறும்போது, புத்தகம் எழுதுதல், தற்காப்புக் கலை பயிற்சி, ஓவியம் வரைதல், நடிப்பு என இப்படி எனக்கு பல துறைகளில் ஏற்பட்ட ஆர்வங்களுக்கும் படைப்பாற்றலுக்கும் அண்ணன் பிரணவ் தான் தூண்டுகோலாக இருந்தார். எனக்கு எப்போதுமே நேரடியான அறிவுரைகளை அவர் கூறியது கிடையாது என்றாலும், எனக்கு எப்போதெல்லாம் வழிகாட்டுதல் தேவையோ அப்போதெல்லாம் நான் அணுகும் முதல் நபர் என்னுடைய அண்ணன் தான். சிறுவயதில் கவிதைகள் என்கிற பெயரில் நான் கிறுக்கி வைத்ததை எல்லாம் புத்தகமாகப் போடும் எண்ணம் வந்தபோது அதை ஊக்குவித்து, என்னுடைய முதல் புத்தகம் வெளிவர உதவியவரும் அவர்தான். திரைப்படங்களில் நடிக்கப் போகிறேன் என்று சொன்னதும், 'போய் நன்றாக செய்துவிட்டு வா, அதை முழுமையாக ரசித்து செய்' என்று சிம்பிளாக கூறினார் என்று தனது அண்ணனைப் புகழ்ந்துள்ளார் விஸ்மயா மோகன்லால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !