பிளாஷ்பேக்: உலகமெங்கும் வெளியான முதல் தமிழ் படம்
தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்பது ஷங்கர் காலத்தில் தொடங்கியதல்ல. சந்திரலேகா, வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன், என்று பல பிரமாண்ட படங்கள் வெளிவந்திருக்கிறது. இந்த வரிசையில் 1990ல் வந்த படம்தான் 'இணைந்த கைகள்'. அப்போது வளர்ந்து கொண்டிருந்த இளம் ஹீரோக்களான ராம்கி, அருண்பாண்டியன் ஆகிய இருவரையும் வைத்து துணிச்சலுடன் இந்த படத்தை தயாரித்தார் ஆபாவாணன். படத்தை இயக்கியது பிரபல இயக்குனர் அல்ல, ஒளிப்பதிவாளராக இருந்த என்.கே.விஸ்வாதன்.
பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் தெரியாமல் சென்றுவிட்டதால் அங்குள்ள சிறையில் அடைக்கப்படுகிறான் 'குணசேகரன்' என்கிற இளைஞன். அந்த இளைஞனை மீட்டு வருவதற்காக ராம்கியும், அருண் பாண்டியனும் கிளம்புகிறார்கள். ராம்கியின் நோக்கம் குணசேகரனை மீட்டு அவனது தாயிடம் ஒப்படைப்பது. அருண் பாண்டியனின் நோக்கம் குணசேகரனை மீட்டு அவனிடம் உள்ள ராணுவ ரகசியங்களை பெற்றுக் கொண்டு கொன்று விடுவது. இப்படி இருவேறு நோக்கங்களுக்காக செல்லும் இருவரின் கைகளும் இணைந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் படத்தின் கதை.
அருண் பாண்டியனின் ஜோடியாக நிரோஷா நடித்திருந்தார். ராம்கியின் ஜோடியாக நடித்திருந்தவர் சிந்து. வில்லனாக நாசர். மகனைப் பார்க்கத் துடிக்கும் ராணுவ டாக்டராக நடித்தவர் ஸ்ரீவித்யா. செந்தில், கவுண்டமணி இல்லாமல் தனித்து காமெடி செய்தார். இசையமைப்பாளர் கியான் வர்மா. கதை, திரைக்கதை, பாடல்கள், ஆகியவற்றை எழுதி தயாரித்தார் ஆபாவாணன்.
இந்த படம் குறித்த முக்கியமான தகவல் என்னவென்றால், அந்தக் காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் படங்கள்தான் இந்தியாவை தாண்டி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் வெளிவரும். முதன் முதலாக உலக நாடுகள் முழுக்க வெளியான படம் 'இணைந்த கைகள்'. 'உலகமெங்கும் வெளியாகிறது' என்கிற தலைப்புடன் 'இணைந்த கைகள்' திரைப்படத்தின் முழுப்பக்க விளம்பரம் நாளிதழ்களில் வெளிவந்தன. அதில் வெளிநாட்டுத் திரையரங்குகளின் பெயர்களும் இருந்தன.