உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இவர் படம்னா இது இல்லாமலா? : தமிழ் சினிமாவிற்கு தனி அடையாளம் தந்த டைரக்டர்கள்

இவர் படம்னா இது இல்லாமலா? : தமிழ் சினிமாவிற்கு தனி அடையாளம் தந்த டைரக்டர்கள்

தமிழ் சினிமாவில் எத்தனையோ டைரக்டர்கள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டும் தங்களுக்கு என்று ஒரு பாணியை பின்பற்றி, அதை தங்களின் அடையாளமாகவே மாற்றிக் கொண்டனர். இவர் படம் என்றால் இந்த விஷயங்கள் எல்லாம் கண்டிப்பாக இருக்கும் என ரசிகர்களே ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள். அப்படி பெயர் சொன்னதுமே, அவரது படங்களில் இருக்கும் தனித்துவமான அம்சங்களை பட்டியலிட வைக்கும் சில டைரக்டர்கள் பற்றியும், அவரது படங்களில் இருக்கும் தனித்துவமான விஷயங்கள் பற்றியும் பார்க்கலாம்.

பாரதிராஜா




'ஸ்டுடியோ செட்களுக்குள்' அடைபட்டுக் கிடந்த தமிழ் சினிமாவைத் கிராமத்து மண் சாலைகளில் பயணிக்க வைத்தவர். அழகான இயற்கை காட்சிகளை சினிமா ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கும் ஸ்டைலை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா. கிராமத்து வாழ்வியல், வயல்வெளிகள், மாட்டு வண்டி மற்றும் கிராமத்து மனிதர்களின் உண்மையான உணர்வுகள் இவரது சிக்னேச்சர் ஸ்டைல். பாரதிராஜா படம் என்றாலே டைட்டில் கார்டில் 'என் இனிய தமிழ் மக்களே' என்ற குரல் பின்னணியில் கும்பிடும் கைகள், பாவாடை தாவணியில் கிராமத்து கலாச்சாரத்தை சொல்லு நாயகி, கிராமத்து வட்டார வழக்குகள் கண்டிப்பாக இருக்கும். இவரது படங்களில் சிவப்பு நிற குறியீடு ஏதாவது ஒரு இடத்தில் கண்டிப்பாக பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

மணிரத்னம்



தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி அமைத்த டைரக்டர்களில் முக்கியமானவர் மணிரத்னம். இயற்கை ஒளி, நேர்த்தியான உரையாடல்கள், மெல்லிய காதல் இவரது படங்களின் ஸ்பெஷல். நிழல்களையும், இயற்கை ஒளியையும் கதையின் மூடிற்கு ஏற்ப அற்புதமாகக் கையாள்வார். பக்கம் பக்கமாக நீண்ட வசனங்களைத் தவிர்த்து, மிகவும் இயல்பான, சுருக்கமான உரையாடல்களைப் பயன்படுத்துவார். ஒரு வார்த்தை, இரண்டு வார்த்தைகளில் மட்டும் தான் மொத்த படத்திலும் வசனங்கள் இருக்கும். இது மணிரத்னம் ஸ்டைல் என்றே ஆகி விட்டது. இவரது பல படங்களில் மழை அல்லது ரயில் நிலையக் காட்சிகள் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

ஷங்கர்



டைரக்டர் ஷங்கர் என்றாலே பிரமாண்டம், சமூக விழிப்புணர்வு, தொழில்நுட்பம் தான். பெரிய பட்ஜெட் படம் என்றாலே தயாரிப்பாளர்களுக்கு ஷங்கர் நினைவு வந்து விடும். அனிமேஷன், VFX மற்றும் பிரமாண்டமான செட்களைப் பயன்படுத்தி பிரம்மிக்க வைப்பார். சாமானிய மனிதன் அல்லது சூப்பர் ஹீரோ சமூக அநீதிக்கு எதிராகப் போராடும் கதைகளே பிரதானம். வெளிநாடுகளில் படமாக்கப்படும் வித்தியாசமான கான்செப்ட் பாடல்கள், ட்ரோன் ஷாட்கள் இவரது சிக்னேச்சர்.

கவுதம் வாசுதேவ் மேனன்



நகர்ப்புறக் காதல், த்ரில்லரான ஆக்ஷன் காட்சிகள், போலீசின் துப்பறியும் வேலை, வாழ்க்கையை படமாக்குவதை தனி ஸ்டைலாக கொண்டிருப்பவர் கவுதம் மேனன். படத்தின் ஹீரோ தன் கதையைத் தானே பின்னணியில் விவரிக்கும் நேரேஷன் பாணியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர். கிட்டார் இசை, மழை, காபி ஷாப், அழகிய ஆங்கில கலந்துரையாடல்கள் மற்றும் மென்மையான காதல் கதைகள் இவரது படங்களில் கண்டிப்பாக இருக்கும். போலீஸ் என்கவுன்ட்டர்கள், ரவுடிகளின் செயல்பாடுகளை அதிகமாக திரையில் காட்டியவர்.

செல்வராகவன்



உளவியல் சிக்கல்கள், தீவிரமான காதல், முரண்பாடான கதாபாத்திரங்கள் ஆகியவற்றின் கலவை தான் செல்வராகவன் படமாக இருக்கும். நாயகனின் மன உளைச்சல், கோபம், ஏக்கம் போன்ற உளவியல் அம்சங்களை ஆழமாகக் காட்டுவார். கதாபாத்திரங்களின் முகத்திற்கு மிக அருகில் வைக்கும் குளோஸ்-அப் ஷாட்கள் இவரது படங்களின் தனி அடையாளம் என்றே சொல்லலாம்.

நெல்சன் திலீப்குமார்



சீரியஸான கதையிலும் 'டார்க் காமெடி' வைத்து படம் எடுத்து தனது தனி ஸ்டைலாக வைத்திருப்பவர். எக்ஸ்பிரஷன் இல்லாத நகைச்சுவை, கதாபாத்திரங்கள் சிரிக்காமல், சீரியஸாகப் பேசிக்கொண்டே அடிக்கும் லூட்டி இவரது படங்களில் கண்டிப்பாக இருக்கும். மருத்துவமனை, மால் அல்லது ஒரு வீட்டின் அறை இவை தான் நெல்சனின் மொத்த படத்தின் காட்சிகளும் இருக்கும். ரெடின் கிங்ஸ்லே, விடிவி கணேஷ் என்று இவரது படத்தில் நடிப்பதற்கு என்று தனியாக ஒரு நடிகர் கேங் வைத்திருப்பார்.

அட்லி



கிளாசிக் ஹிட் கதைகளை எடுத்து, இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப பிரமாண்டமான எமோஷனல் மாஸ் பாக்கெட்டாகத் தருபவர். ஹீரோவுக்கு பிரமாண்டமான ஸ்லோ-மோஷன் என்ட்ரி மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பிளாஷ்பேக் கதைகள் கண்டிப்பாக அட்லி படத்தில் இருக்கும். தந்தை-மகன், கணவன்-மனைவி அல்லது சகோதரி பாசத்தை மையமாகக் கொண்ட செண்டிமெண்ட் இருக்கும். பல காட்சிகள், எங்கேயோ பார்த்தது போல் இருக்கே என்ற நினைவை வரவழைக்கும். பணக்காரத்தனமான விஷுவல்ஸ், கண் கவரும் கலர் கலரான செட்கள் மற்றும் அனல் பறக்கும் மாஸ் பாடல்கள் நிச்சயம் இருக்கும்.

லோகேஷ் கனகராஜ்



ஆக்ஷன் த்ரில்லர், LCU (Lokesh Cinematic Universe), டார்க் தீம் அடிப்படையாக வைத்து தான் இவரது படங்களே இருக்கும். இவரது கதைகளின் பெரும்பகுதி இரவு நேரங்களிலேயே நடப்பதாக இருக்கும். டூயட் பாடல்கள், காதல் காட்சிகள், அழகான ஹீரோயின் என வழக்கமான தமிழ் சினிமாக்களில் இருக்கும் எதுவும் இல்லாமல் படம் எடுப்பது தான் லோகேஷின் தனி ஸ்டைல். அதற்கு பதில் பழைய ரெட்ரோ பாடல்களை ஆக்ஷன் காட்சிகளுக்குப் பின்னணி இசையாகப் பயன்படுத்தி, அனைவருமே மறந்து போன பழைய சினிமா பாடல்களை டிரெண்டாக்கி விட்டு விடுவார். போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போரே இவரது பெரும்பாலான படங்களின் மையம்.

வெற்றிமாறன்



நிஜ சம்பவங்கள், அரசியல், வன்முறை மற்றும் நாவல் தழுவல்கள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தான் வெற்றிமாறன் படத்தின் கதையே இருக்கும். சினிமாத்தனம் இல்லாத, அப்படியே நிஜ வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள் இவரது தனித்துவம். அதிகார வர்க்கம் எளிய மக்களை எப்படி ஒடுக்குகிறது என்பதை ஆழமாகப் பேசுவார். கட் செய்யப்படாத நீண்ட ஷாட்கள் மற்றும் தீவிரமான சண்டைக் காட்சிகள் இவரது படங்களில் கண்டிப்பாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !