இளையராஜா இசையில் உருவாகும் 'தட்டுவண்டி'
அப்பா, மகன் பாசத்தை அடிப்படையாகக்கொண்டு பல படங்கள் வந்திருந்தாலும், புதுச்சேரியில் பிளாட்பாரத்தில் வசிக்கும் ஒரு சிறுவன், தள்ளுவண்டி இழுத்து பிழைக்கும் அவன் தந்தை பாசத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாகியுள்ள படம் 'தட்டுவண்டி'. சிறுவன் ஆக ராகவன் மற்றும் தந்தையாக விஜயபாஸ்கர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், திலீபன், மேரி பென்சி குளோரியா மற்றும் தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.
இப்படத்தை, 2021ம் ஆண்டு இரண்டு மாநில அரசின் விருதுகளை வென்ற 'பில்டர் கோல்டு' திரைப்படத்தை இயக்கிய விஜயபாஸ்கர் இயக்கியுள்ளார். அவரே தந்தையாகவும் வருகிறார். படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் 'தட்டுவண்டி' திரைப்படம் தியேட்டரில் வெளியாக உள்ளது. மாறுபட்ட கதை என்பதால் இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க சம்மதித்துள்ளார். முழுக்க புதுச்சேரி வீதிகள், மார்க்கெட் பகுதியில் இந்த படப்பிடிப்பு நடந்துள்ளது. கிளைமாக்ஸ் உருக்கமாக இருக்கும் என்கிறது படக்குழு. இந்த படம் தவிர, பால்கி இயக்கும் தமிழ் படம் உட்பட பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.