உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடன இயக்குனர் சங்கத்தின் விதிகளுக்கு கடிவாளம் போட வேண்டும்: தெலுங்கு தயாரிப்பாளர்கள் போர்க்கொடி

நடன இயக்குனர் சங்கத்தின் விதிகளுக்கு கடிவாளம் போட வேண்டும்: தெலுங்கு தயாரிப்பாளர்கள் போர்க்கொடி


தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாகவே நடன இயக்குனர் சங்க தேர்தல் அறிவிப்பு தொடர்பாக நடன இயக்குனர்கள் ஜானி மற்றும் சேகர் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சமீபத்தில் தான் இவர்கள் இருவரையும் தனது படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சிரஞ்சீவி வரவழைத்து சமாதானப்படுத்தி வைத்துள்ளார். இருந்தாலும் இந்த சூழலில் தயாரிப்பாளர்கள் பலரும், நடன இயக்குனர்கள் சங்கத்தில் இருக்கும் விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும்; அவை தயாரிப்பாளர்களுக்குத் தேவையில்லாத செலவுகளை ஏற்றி வைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன எனத் தங்களது எதிர்ப்புக் குரல்களைத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக ஒரு பாடலுக்குத் தேவையான நடன கலைஞர்களைத் தேர்ந்தெடுப்பதில் தயாரிப்பாளர்களுக்கு உரிமை இல்லை என்றும், உதாரணமாகக் கல்லூரி மாணவர்களின் தோற்றம் கொண்ட நபர்கள் தேவைப்படும் இடங்களில் கூட சங்கத்தின் வயதான நடனக் கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளதாம். அது மட்டுமல்ல, சங்கத்தின் விதிமுறைகளின்படி உள்ளூர் நடன கலைஞர்கள் மற்றும் மும்பை அல்லது சென்னை போன்ற பிற மாநில நடன கலைஞர்களை சம எண்ணிக்கையில் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்கிற விதி இருப்பதால், இது தயாரிப்பாளர்களுக்குத் தேவையற்ற கூடுதல் செலவுகளை உருவாக்குகிறதாம்.

மேலும் வெவ்வேறு மாநில நடன கலைஞர்களை அழைத்து வரும்போது அந்த குழுக்களை ஒருங்கிணைப்பதற்காக தனியாக ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதும் பட்ஜெட்டை எகிற வைக்கிறதாம். அது மட்டுமல்ல, புதிய நடன கலைஞர்களைச் சங்கத்தில் சேர விடாமல் தடுக்கும் விதமாக உறுப்பினர் கட்டணமாக 6 லட்சம் ரூபாய் வரை செலுத்தச் சொல்லி நிர்பந்திப்பதால், திறமையான புதியவர்கள் திரையுலகுக்கு வருவதைத் தடுக்கிறது என்றும் தயாரிப்பாளர்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !