பஹத் பாசில் நடிக்க மறுத்த ஹாலிவுட் படத்தின் டிரைலர் வெளியானது
ஹாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான டாம் குரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிகர்'. ஆஸ்கர் விருது பெற்ற அலட்ஜான்ட்ரோ என்பவர் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் அக்டோபர் 2ம் தேதி இந்தியாவில் ரிலீஸ் ஆகிறது. வார்னர் பிரதர்ஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது. தற்போது இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகர் பஹத் பாசிலை அழைத்தார்கள். ஆனால் அவர் சில காரணங்களால் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.
அதாவது பஹத் பாசிலின் கதாபாத்திர உச்சரிப்பைச் சரியாகக் கொண்டு வருவதற்காக, அமெரிக்காவிற்குச் சென்று மூன்று முதல் நான்கு மாதங்கள் அங்கு தங்கி பயிற்சி எடுக்குமாறு அவரிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பயிற்சிக்காக அவர் அமெரிக்காவில் தங்குவதற்கான செலவுகளைத் தயாரிப்பு நிறுவனம் ஏற்க முன்வரவில்லை. அதனால் அந்தப் பயிற்சிக்காகச் செலவிடும் பணமும், காலமும், உழைப்பும், தனக்கு கொடுக்கப்பட்ட இருந்த அந்த கதாபாத்திரம் தனக்கு வழங்கும் வாய்ப்பிற்கு இணையாக இல்லை என்று கருதிய பஹத் பாசில், அந்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டேன் என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.