கமலுடன் நடிக்கணும், முருகன் அருளால் 3 ஆயிரம் படங்கள் வரும்: யோகிபாபு
சுப்ரமணியம் சிவா இயக்கிய 'யோகி' படத்தில் சின்ன கேரக்டரில் நடிகராக அறிமுகம் ஆனவர் பாபு. அந்த படம் 2009ம் ஆண்டு வெளியானது. அன்றுமுதல் பாபு, 'யோகிபாபு' ஆனார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் படங்கள், இயக்குனர் படங்களில் நடிக்க ஆரம்பித்து பிசியானார். இந்தியிலும் ஷாருக்கானுடன் நடித்தார். இப்போது அவர் நடித்த 300வது படமான 'அர்ஜூனன் பேர் பத்து' ஜூலை 17ல் ரிலீஸ் ஆகிறது. வாகனத் திருட்டு, மோசடி, பாதிக்கப்படும் சாதாரண மக்கள் என்ற கதைகளத்தில் உருவான இந்த படத்தை ரா.ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.
சென்னையில் நடந்த இந்த பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் யோகிபாபு பேசுகையில், ''நான் எப்போதும் காமெடியன்தான். என்னுடன் யார் நடித்தாலும் அந்த இடத்தில் என்னால் என்ன காமெடி பண்ண முடியும் என யோசிப்பேன். நயன்தாரா தொடங்கி பல ஹீரோயின்கள், ஹீரோக்களுடன் நடித்துவிட்டேன். இன்னமும் கமல்ஹாசனுடன் நடிக்கவில்லை. என் வளர்ச்சிக்கு கடவுள் அருள் முக்கியம். நான் வணங்கும் முருகன் என்னை இந்த நிலையில் வைத்துள்ளார். அவர் அருளால் 3 ஆயிரம் படங்களில் கூட நடிக்கலாம்.
கதைநாயகனாக பல படங்களில் நடித்தாலும், நான் காமெடியன்தான். இத்தனை காலம் என்னுடன் இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி. இப்போதும் பல படங்களில் நடித்து வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கதையை இயக்குனர் சொன்னார். பின்னர் அவரை காணவில்லை. ஒரு நாள் ஆபீசில் இருந்து யோசித்தபோது அவருக்கு போன் போட்டேன். கார் டிரைவராக இருப்பதாக சொன்னார். அவரை அழைத்து மீண்டும் கதையை சரி செய்து இந்த படத்தில் நடித்தேன். பல உதவி இயக்குனர்களை இயக்குனர் ஆக்க தயாராக இருக்கிறேன். என்னால் முடிந்த உதவி செய்வேன்'' என்றார். இந்த படவிழாவில் அவரை முதலில் நடிகர் ஆக்கிய சுப்ரமணியம் சிவாவும் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினார்.