உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூலை 5ல் 3வது திருமணம் : அமீர்கான் அறிவிப்பு

ஜூலை 5ல் 3வது திருமணம் : அமீர்கான் அறிவிப்பு

பாலிவுட் நடிகர் அமீர்கான் 61 வயதில் தனது காதலி கவுரி ஸ்ப்ராட்டை (47 வயது) ஜூலை 5ம் தேதி தனது இல்லத்தில் திருமணம் செய்வதாக அறிவித்துள்ளார். இது இவருக்கு மூன்றாவது திருமணமாகும்.

பாலிவுட்டில் பிரபலமான முன்னணி நடிகர் அமீர்கான், 61. இவருக்கு ஏற்கனவே இரு திருமணங்கள் நடந்து விவாகரத்து ஆன நிலையில் கவுரி ஸ்ப்ராட், 47 என்ற பெண்ணை காதலிக்கிறார். சில நிகழ்ச்சிகளில் இவரை அமீர்கான் அழைத்து வந்திருக்கிறார். கவுரிக்கு ஏற்கனவே திருமணமாகி, 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் அமீர்கான் - கவுரியின் திருமணம் ஜூலை 5ல் நடப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இப்போது அமீர்கானே தான் கவுரியை திருமணம் செய்ய போவதை அதிகாரப்பூர்வமாக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் அறிவித்தார். இந்த திருமணம் தனது இல்லத்தில் நடப்பதாகவும், இதில் மணமக்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

அமீர்கான் 1986ல் ரீனா தத்தா என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஜூனைத் கான் என்ற மகனும், ஐரா கான் என்ற மகளும் உள்ளனர். 2002ல் ரீனாவை பிரிந்த அமீர், 2005ல் கிரண் ராவ்வை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். 16 ஆண்டுகள் கழித்து 2021ல் கிரணையும் விவாகரத்து செய்தார் அமீர். இப்போது கவுரியை 3வது திருமணம் செய்ய போகிறார் அமீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !