சமந்தா மாமியார் ஆன கவுதமி
தமிழில் படத்தில் நடிப்பதை குறைத்துவிட்டார் கவுதமி. சமந்தாவின் 'எங்கள் தங்கம்' படத்தில் மாமியார் ஆக வருகிறார். படம் குறித்து அவர் கூறுகையில், ''இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் இனிமையானது. படப்பிடிப்பு எப்போது தொடங்கி எப்போது முடிந்தது என்பதே தெரியவில்லை. படம் முடிந்துவிட்டதா, இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு தொடர்ந்திருக்கலாமே என்று நினைக்க வைத்த அளவுக்கு மகிழ்ச்சியாக இந்தப் பயணம் இருந்தது.
சமீபகாலமாக நான் அதிகமான படங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இந்தப் படத்தை ஒப்புக்கொண்டதற்கு முக்கியக் காரணம் இதன் பின்னால் இருந்த மனிதர்கள் தான். தயாரிப்பாளரும் இயக்குனரும் ஒரு படத்தின் மிக முக்கியமான தூண்கள். இந்தப் படத்தில் அந்த இரண்டு பொறுப்புகளையும் ஏற்றிருக்கும் சமந்தா மற்றும் நந்தினி ரெட்டி மீது எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உள்ளது.
இருவரும் மிகவும் தன்னம்பிக்கை மிக்கவர்கள், வலிமையானவர்கள், அதே நேரத்தில் கண்ணியமானவர்கள். அவர்களுடைய பணித்திறன் மற்றும் அர்ப்பணிப்பை நான் எப்போதும் மதித்து வந்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு பெருமையாக இருக்கிறது.
பலர் இதை 'உமன் பவர்' என்று கூறலாம். ஆனால் எனது பார்வையில் இது 'டாலண்ட் பவர்'. இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் பாலினம் அல்ல, இதில் பணியாற்றிய அனைவரின் திறமையும் உழைப்பும் தான். சிறந்த கதை, அருமையான இயக்கம், தரமான தயாரிப்பு, அற்புதமான நடிப்பு மற்றும் இசை என ஒவ்வொரு அம்சமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
சமந்தாவுக்கும், நந்தினி ரெட்டிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். அவர்கள் நினைக்கும் உயரங்களை அடைந்து, அதையும் தாண்டி இன்னும் பெரிய வெற்றிகளை பெற வேண்டும். அவர்களுடைய பயணம் பலருக்கும் உத்வேகமாக அமைய வேண்டும். இந்தப் படம் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன் என்று சொல்ல மாட்டேன். 'எங்கள் தங்கம்' கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். இது ஒரு அழகான, மனதை தொடும் திரைப்படம்” என்றார்.