வித்தியாசமான காதல் கதை 'ஹார்ட்டின்': மடோனா செபாஸ்டின்
மலையாளத்தில் வெளிவந்த 'பிரேமம்' படத்தின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் மடோனா செபாஸ்டின். 'காதலும் கடந்து போகும்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். 'கவன், பவர் பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்ம்டா' படங்களில் நடித்தவர் கடைசியாக 2024ம் ஆண்டு 'ஜாலியோ ஜிம்கானா' படத்தில் நாயகியாக நடித்தார். இதற்கிடையில் விஜய் நடித்த லியோ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.
தற்போது அவர் 'ஹார்ட்டின்' படத்தின் மூலம் மீண்டும் நாயகியாக திரும்பி இருக்கிறார். டிரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன், மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'ஹார்ட்டின்'. இதில் சனந்த், இமயா, வாட்ஸப் மணி , டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். வருகிற 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தில் நடித்திருப்பது பற்றி மடோனா கூறும்போது, “இந்த கதையை கேட்டு மிகவும் பிடித்து போய் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது ஒரு லவ் ஸ்டோரி. ஏராளமான காதல் கதைகள் வந்து கொண்டிருந்தாலும், இதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. இந்த படம் எனது இதயத்திற்கு நெருக்கமான படமாக அமைந்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ், மணிரத்னம் டீம் மாதிரி பெரிய யூனிட்டில் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இந்த படத்தின் குழுவுடன் பணியாற்றியபோது அதை ஒரு பேமிலி போன்று உணர்ந்தேன்” என்றார்.