கால் டாக்ஸி போல தினசரி படப்பிடிப்புக்கு ஹெலிகாப்டரை பயன்படுத்திய அக்ஷய் குமார்
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர்கள் கமல் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் படப்பிடிப்புக்குச் செல்வதற்குத் தனி விமானங்களைப் பயன்படுத்துவது இல்லை என்றும், பயணிகள் பயணிக்கும் பொது விமானத்தையே பயன்படுத்திச் செலவைக் குறைக்கப் போவதாகவும் கூறியதுடன், அதை நடைமுறைப்படுத்தவும் துவங்கியுள்ளனர். அதேசமயம் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, இரண்டரை மணி நேர தூரத்தில் உள்ள படப்பிடிப்பு தளத்திற்கு கால் டாக்ஸியைப் போல தினசரி ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி வந்தார் என்கிற சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பாலிவுட்டில் நடன இயக்குனராக இருந்து, அதன் பிறகு திரைப்பட இயக்குனராக மாறியவரான பரா கான், அக்ஷய் குமாரை வைத்து 'தீஸ் மார் கான்' என்கிற படத்தை இயக்கினார். கடந்த 2010ல் இந்த படம் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் பாரா கான், அக்ஷய் குமார், இயக்குனர் பிரியதர்ஷன் உள்ளிட்டோர் ஒரு வட்டமேஜை கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பரா கான், மும்பையிலிருந்து 2 மணி நேரம் பயணிக்கும் தொலைவில் உள்ள இடத்தில் 'தீஸ் மார் கான்'படப்பிடிப்பு நடந்தது. அதனால் படக்குழுவினர் அனைவரும் அங்கேயே தங்கி விட்டோம். ஆனால் அக்ஷய் குமார் மட்டும் தினசரி வீட்டிலிருந்து கால் டாக்ஸியைப் பயன்படுத்துவது போல தினசரி ஹெலிகாப்டரில் வந்து சென்றார். இதன் மூலம் என் காசையெல்லாம் அவரே தின்றுவிட்டார் என்று ஜாலியாகக் குறிப்பிட்டார். அதற்குப் பதிலளித்த அக்ஷய் குமார், என்னது உங்கள் காசா ? அந்தப் படத்திற்கு நானும் தான் தயாரிப்பாளர் என்பதை மறந்து விட்டீர்களா? என்று பதிலுக்குக் கிண்டலடித்தார்.