நண்பனை இயக்குனர் ஆக்கிய டாடா பட இயக்குனர்
காளிதாஸ் 2 படத்தில் வில்லனாக நடித்தவர் அஜய் கார்த்தி. இவர் பிரபல வினியோகஸ்தர் செந்தில் மகன். இப்போது டார்க் என்ற திரில்லர் படத்தில் கதைநாயனாக நடித்துள்ளார். இந்த படத்தை டாடா படத்தை இயக்கிய கணேஷ்பாபு தயாரிக்க, அவர் நண்பர் கல்யாண் இயக்கியுள்ளார்.
சென்னையில் நடந்த விழாவில் கணேஷ் கே பாபு பேசுகையில் 'நான் இயக்கிய டாடா படத்தில் என்னுடன் பணியாற்றியவர் கல்யாண். அவர் என் சின்ன வயது நண்பர். 20 ஆண்டுகால நட்பு. நான் பத்து ஆண்டுகள் போராடிவிட்டு சினிமாவைவிட்டு வெளியேறிவிட்டேன். அப்போது திடீரென டாடா வாய்ப்பு வர, சென்னை அண்ணாநகரில் உள்ள தனது ஆபீசை கொடுத்து உதவியவர் கல்யாண். தனது வேலையை விட்டு டாடா-வில் என்னுடன் பணியாற்றினார்.
நான் தயாரிக்கும் இந்த படத்தை அவர் இயக்கியிருக்கிறார். இந்த கதையை முதலில் தனுஷை மனதில் வைத்து உருவாக்கினோம். பின்னர், அஜய் கார்த்தி வந்தார். அவர் சிறப்பாக நடித்து இருக்கிறார். கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடக்கும்போது நான் சென்றேன். ஒரு முக்கியமான காட்சியை அவர் ரீ டேக் கேட்டார். நேரம் போகிறது, செலவாகிறது என்று நான் கோபப்பட்டேன். ஆனால், அந்த ரீ டேக் நன்றாக வந்தது. அன்று முதல் யார் ரீ டேக் கேட்டாலும் மறுக்காமல் ஓகே சொல்லிவிடுகிறேன். அடுத்து நான் ரவி மோகன் நடிக்கும் கராத்தேபாபு படத்தை இயக்கி வருகிறேன். என்னுடைய இன்னொரு உதவியாளர் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் பிளடிபாலிடிக்ஸ் படத்தை இயக்கி வருகிறார்'' என்றார்.