உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அம்மா கேரக்டரில் நடிக்க மறுக்கும் சுவாசிகா

அம்மா கேரக்டரில் நடிக்க மறுக்கும் சுவாசிகா


'கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சிக் கிராமம்' உள்பட சில படங்களில் நாயகியாக நடித்த சுவாசிகா போதிய வாய்ப்புகள் இன்றி கேரளாவிற்கே திரும்பிச் சென்றார். பல வருட இடைவெளிக்கு பிறகு, 'லப்பர் பந்து' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து இப்போது பிசியான நடிகை ஆகிவிட்டார்.

தற்போது அவர் நடித்துள்ள 'நூறு சாமி' படம் வருகிற 19ம் தேதி வெளியாகிறது. படத்தை இயக்கிய உள்ள சசி சுவாசிகாவுக்கு விருதுகள் குவியும், சாவித்ரிக்கு பிறகு அவர்தான் சிறந்த நடிகை என்று புகழ்ந்து வருகிறார். பொது மேடையில் இயக்குநர் மிஷ்கின் அவரின் காலில் விழுந்து வணங்கி பரபரப்பு ஏற்படுத்தினார்.

'நூறு சாமி' குறித்து சுவாசிகா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 16 வயசுல நடிக்கத் தொடங்கினேன். தமிழ்ல சில படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். அப்புறம் மலையாளத்துல நிறைய படங்கள்ல நடிச்சேன். 'லப்பர் பந்து'க்குப் பிறகு தமிழ், தெலுங்குலயும் பிஸியாயிருக்கேன். அதனால 2-வது இன்னிங்ஸ்னு சொல்லலாம்.

லப்பர் பந்து படம் மூலமாகத்தான் இந்த பட வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னை வைத்துதான் அந்த கேரக்டரையே எழுதியதாக சசி சார் சொன்னபோது நான் நெகிழ்ந்து போனேன். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ஒரு கதைன்னா, அதை யார் இயக்குறாங்க அப்படிங்கறது முக்கியம். 'பூ, பிச்சைக்காரன்' உள்பட சசி சாரோட படங்கள் எல்லாமே பார்த்திருக்கேன். முதல் முறையாக அவர் கதை சொல்லும்போதே, நான் ஓகே சொல்லிட்டேன்.

இந்தப் படத்துல நான் அம்மா கேரக்டர் பண்றத பார்த்து நிறைய தெலுங்கு படங்களில் அம்மா கேரக்டர்கள் வந்தது. அம்மா கேரக்டர் எல்லா படத்துலயும் இருக்கு. சும்மா காபி கொடுத்துட்டு போறது, டிபன் எடுத்து வைக்கிறது, 'சாப்பிடுங்க'ன்னு பார்மாலிட்டியா ஒரு வசனம் பேசிட்டு போற மாதிரி கதைகள்ல நடிக்க எனக்கு உடன்பாடில்லை. எனக்கு ஒரு 55 வயதாகும்போது நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். நூறு சாமி படத்துலேயும் அம்மா கேரக்டர்தான். ஆனால் இந்த அம்மா வேற மாதிரி, படம் வரும்போது தெரியும். என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !