கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான்
மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் அதிக படங்களில் நடித்தவர் ரகுமான். ஆரம்ப காலங்களில் ஒரு சில கிராமிய படங்களில் நடித்தார் அதன் பிறகு நகர்ப்புற கதைகள் கிரைம் திரில்லர் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராமிய கதை ஒன்றில் நாயகனாக நடிக்கிறார். இதனை பாரதி பாலகுமாரன் இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குனர் கூறும்போது: தெய்வ நம்பிக்கைகள் மற்றும் நாட்டுப்புற மரபுகளின் பின்னணியில் உருவாகும் படம் இது. மண் சார்ந்த கதை களத்தில் இருக்குற வாழ்வியலை பல படங்கள் பேசியுள்ளது. ஆனால் அந்த வாழ்வியலுக்கு பின்னால் மறைந்திருக்குற பல 'அமானுஷ்ய' கதைகள் நம்ம 'நாட்டார்' மரபில் உண்டு. அப்படி ஒரு 'நாட்டார் மர்மக்கதை' தான் இக்கதை.
1980களின் பின்னணியில் நடக்கும் கதையில் 'அமானுஷ்ய' சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தை காக்க முயற்சிக்கும் ஜமீன் கதாபாத்திரத்தில் ரகுமான் நடிக்கிறார். இவ்வாறு இயக்குனர் பாரதி பாலகுமாரன் கூறினார்.
இந்தப் படத்தை கோமளா ஹரி பிக்சர்ஸ் சார்பில் கோமளா, ஹரி பாஸ்கரன் தயாரிக்கிறார்கள் இதில், இன்னொரு நாயகனாக விஷ்வா நடிக்கிறார். மேலும், மைம் கோபி, ஆடுகளம் நரேன், ரிஷா ஜாக்கோப்ஸ், முனிஷ்காந்த், அனுபமா குமார், பாபா பாஸ்கர், ரெம்யா சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.