திரையரங்குகளுக்கு ஜாக்பாட்... இனி 5 காட்சி திரையிடலாம் : முதல்வர் விஜய் உத்தரவு
தமிழக தியேட்டர்களில் இதுவரை அனைத்து நாட்களிலும் 4 காட்சிகளும், பண்டிகை கால விடுமுறை நாட்களில் மட்டும் 5 காட்சிகளும் படங்கள் திரையிடப்பட்டன. இப்போது அதில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. இனி புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட முதல்வர் விஜய் அனுமதி வழங்கி உள்ளார்.
நடிகர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் சினிமா துறையை சேர்ந்த பல சங்கங்களை சேர்ந்தவர்கள் அவரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். மே 16ல் திரைப்படத் துறையினர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.
இதுபற்றி ஆலோசித்த முதல்வர் விஜய் சட்டப்படி தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் மேற்கொண்டார். அதன்படி, இனி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் படங்கள் முதல் ஏழு நாட்கள் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும், உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஐந்து காட்சிகள் திரையிடவும் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
முதல்வர் விஜயின் இந்த உத்தரவு சினிமா மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.