பசில் ஜோசப், அல்லு அர்ஜுன் கூட்டணி உறுதி : ஆனால் அது சக்திமான் கதை அல்ல
‛புஷ்பா' படத்தின் இரண்டு பாகங்களின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்தடுத்து தமிழ் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அட்லீயின் இயக்கத்தில் ராக்கா என்கிற படத்தில் நடித்துவரும் அல்லு அர்ஜுன், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.
அதேசமயம் மலையாள இளம் இயக்குனர் பசில் ஜோசப் டைரக்ஷனில் அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார் என்றும், ஒரு செய்தி சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதை உறுதிப்படுத்துவது போல அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ் திருமண நிகழ்வில் பசில் ஜோசப் கலந்து கொண்டதும், அல்லு அர்ஜுனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.. ஒருவேளை இவர்கள் இருவரும் சந்தித்ததால் தான் இணைந்து படம் செய்யப் போகிறார்கள் என்கிற பேச்சு எழுந்ததாகவும் சொல்லப்பட்டது..
ஆனால் சமீபத்தில் பசில் ஜோசப் நடிப்பில் வெளியாகியுள்ள அதிரடி படத்தின் இயக்குனர் அருண் அனிருத்தன் ஒரு புதிய தகவலை கூறியுள்ளார்.. இவர் ஏற்கனவே மின்னல் முரளி படத்தில் கதாசிரியராக பசில் ஜோசப்புடன் இணைந்து பயணித்தவர். அதுமட்டுமல்ல, பசில் ஜோசப் அடுத்ததாக இயக்க உள்ள படத்திற்கு பால்சன் சக்காரியா என்பவருடன் இணைந்து தற்போது திரைக்கதை எழுதி வருகிறார்..
இந்த தகவலை கூறியுள்ள அவர், அல்லு அர்ஜுன் - பசில் ஜோசப் படம் நிச்சயமாக சக்திமான் கதை அல்ல. அந்த கதையை ஏற்கனவே உருவாக்கினோம். ஆனால் சில காரணங்களால் அதை நிறுத்திவிட்டோம். அதற்கும் அல்லு அர்ஜுன் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். இதன் மூலம் அல்லு அர்ஜுன் படத்தை பசில் ஜோசப் இயக்குகிறார் என்கிற தகவலை இவர் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம்.