இளம் பெண் அமைச்சரை வாழ்த்திய நடிகை ரேவதி
தமிழக அமைச்சரவையில் இளம் பெண் அமைச்சராகப் பதவியேற்றுள்ளவர் கீர்த்தனா. அவருக்கு தொழில் துறை இலாகா நேற்று ஒதுக்கப்பட்டுள்ளது. சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
அவரை நடிகை ரேவதி திடீரென சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு குறித்து அவர் பகிர்ந்துள்ளதாவது, “நேற்று இரவு உணவகத்தில் ஒரு பழக்கமான முகத்தைப் பார்க்க நேர்ந்தது. என் நண்பர் ஒருவர் அது கீர்த்தனா என்று சுட்டிக் காட்டினார். அவர் தவெக-வின் இளைய எம்.எல்.ஏ., சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1996-ல் பிறந்தவர், கணிதத்தில் பி.எஸ்.சி. மற்றும் புள்ளியியலில் எம்.எஸ்.சி. படித்தவர். கடந்த பத்து வருடங்களாக முக்கிய அரசியல் கட்சிகளுடன் உத்தியாளராகப் பணியாற்றி, வேலையிலேயே கற்றுக்கொண்டவர்… மாற்றமாக இருப்பதில் கவனமும் உறுதியும் தான் அவர் பேசியது.
எதிர்கால அரசியலும் அரசியல்வாதிகளும் இப்படித்தான் இருக்க வேண்டும் — தங்கள் பணியைச் செய்யும், மக்களிடையே நடந்து பிரச்னைகளைத் தனிப்பட்ட முறையில் புரிந்துகொண்டு, மக்களுடன் இணைந்து தீர்க்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்… கீர்த்தனா தன் கொள்கைகளில் உறுதியாக இருந்து, வாக்காளர்களுக்கு வாக்குறுதியளித்த பாதையில் நடக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
சக்தி அவருக்கு வலிமையாக இருக்கட்டும், பலவீனமாக அல்ல. தொலைநோக்கு கொண்ட இத்தகைய இளைஞர்கள் நம் அரசில் பங்கேற்பதைப் பார்த்து மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.