'துரந்தர் 2' பாடல் காப்பிரைட் சர்ச்சை விவகாரம் ; சமரச பேச்சு வார்த்தைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்
கடந்த நவம்பர் மாதம் பாலிவுட்டில் ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் வெளியான 'துரந்தர்' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'துரந்தர் 2' படமும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற 'ஓய் ஓய்' என்கிற பாடலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் திருமூர்த்தி பிலிம்ஸ் என்கிற நிறுவனம் இந்த பாடல் தாங்கள் தயாரித்த 'திரிதேவ்' என்கிற படத்தில் இடம்பெற்ற திர்ச்சி டோப்பி வாலா பாடலில் பயன்படுத்தப்பட்ட இசையை அனுமதி இன்றி காப்பி அடித்து 'துரந்தர் 2' பாடலில் பயன்படுத்தியிருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த பிரச்சனையில் பணம் பின்னணியில் இருப்பதால். இரு தரப்பினரும் தங்களது ராயல்ட்டி மற்றும் இழப்பீடு குறித்த விஷயங்களை சமரச தீர்வு மையம் (மீடியேசன்) மூலமாக தீர்த்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டார். மேலும் இந்த பிரச்சனையில் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஒரு மூத்த மீடியேட்டர் ஒருவரையும் நீதிமன்றம் நியமித்துள்ளது.