டிரைலருக்கு தனி எடிட்டர் தேவையா? கேள்வி எழுப்பும் தயாரிப்பாளர்
சினிமாவில் ஒரு இயக்குனர் ஜெயிக்க எடிட்டிங் நன்றாக தெரிந்து இருக்க வேண்டும். எடிட்டிங் டேபிளில்தான் ஒரு படம் உருவாகிறது என்பார்கள். அதனால், தமிழ் சினிமாவில் 23 சங்கங்கள் பெப்சியில் இருந்தாலும் எடிட்டிங் யூனியனுக்கு தனி மரியாதை உண்டு.
தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் என்று அழைக்கப்படும் எடிட்டிங் யூனியனுக்காக 2026-2029ம் ஆண்டு தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் கோபி தலைவராக வெற்றி பெற்றார். இந்த சங்கத்தின் புது நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் நடந்தது. இதில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குனர்கள் லிங்குசாமி, நித்திலன், கார்த்திக் சுப்பராஜ், எழில், தயாரிப்பாளர்கள் டி. சிவா, தனஞ்செயன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் செயலாளர் உமாசங்கர் பேசுகையில், ''1972ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் நாள் தி. நகரில் உள்ள வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் 86 உறுப்பினர்கள் கொண்ட படத்தொகுப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூடியது. வயதில் மூத்தவரும் மிகப்பெரிய படத்தொகுப்பாளருமான ஜிடி ஜோஷி தலைமையில் எம்எஸ் மணி பொதுச்செயலாளராகவும் இருந்த சங்கம் தற்போது 54வது ஆண்டு வெற்றிநடை போடுவது மிகப்பெரிய விஷயம். பலரும் இந்த சங்கத்தை செழுமைப்படுத்தியுள்ளனர். முன்பு தென்னிந்திய மொழி திரைப்படங்கள் அனைத்தும் சென்னையில் உருவானதால் இனம், மதம், மொழி மறந்து சகோதரராக பழகி இந்த சங்கத்தை வலுப்படுத்தியதை இன்று நினைவுகூறுகிறோம்'' என்றார்.
விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ''ஒரு படத்தின் மீது தயாரிப்பாளருக்கு நம்பிக்கை வரவழைப்பதே எடிட்டர்தான். நீங்கள் இன்னும் சிறப்பாக உழைக்க வேண்டும். இப்போது படத்தின் டிரைலர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துக்கிறது. இதை எடிட்டர்ஸ் நீங்களும் புரிந்து கொண்டு சீரியஸாக செய்ய வேண்டும். படத்தின் எடிட்டரால் டீசர், டிரைலர் உருவாக்க முடியாதபோது இதற்காக வெளியில் தனியாக ஒரு எடிட்டர் வேலைக்கு எடுக்கும்போது குறைந்தது ஒரு லட்சம், இரண்டு லட்சம் கேட்கிறார்கள். அவர்களால் ஒரு டிரைலர் சூப்பராக உருவாக்கும்போது உங்களால் ஏன் முடியாது? இதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். திரைப்படத்தின் மொத்த புரோமோஷன் வரையும் திரைப்படத்தின் எடிட்டர் நீங்கள்தான் பொறுப்பெடுத்து செய்ய வேண்டும்.'' என்றார்.